search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு பணி"

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
    • சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.

    ராயபுரம்:

    வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

    ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.

    இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

    இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சத்தீஸ்கர் ஜாங்கிரி - ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜான்ஜ்கிர், ஜிதேந்திர சுக்லா கூறுகையில், "முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். மீட்பு பணி 80 மணி நேரமாக நடந்து வருகிறது. ஆனால் மிக விரைவில் ராகுலை மீட்க முடியும். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்வர் பூபேஷ் பாகேல் வீடியோ மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்," என்று கூறினார்.

    தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ThaiCaveRescue #NavyDiverDies
    பாங்காக்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

    இந்த நிலையில், சிறுவர்கள் இருந்த குகைக்குள் சென்று திரும்பிய தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். 

    தாய்லாந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரராக பணியாற்றிய சமன் குணன், சிறுவர்களை மீட்கும் பணிக்கு உதவி செய்வதற்காக தானாக முன்வந்து கடற்படையுடன் இணைந்துள்ளார். குகைக்குள் சென்று சிறுவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்த குணன், அங்கிருந்து இன்று அதிகாலை நீருக்குள் மூழ்கி நீந்தியபடி குகையின் மற்றொரு பகுதியில் உள்ள முகாமிற்கு திரும்பினார். ஆனால், வழியிலேயே அவரது ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் குறையத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் குணன். 

    நீர்மூழ்கி வீரரின் மரணம் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆபத்து நிறைந்த இந்த மீட்புப் பணியில் முதல் உயிரிழப்பு இதுவாகும். 

    சிறுவர்களை மீட்பதற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர் குணனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சத்தாஹிப் கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.  #ThaiCaveRescue #NavyDiverDies
    ×